Saturday, February 16, 2013

இந்தியாவின் பெரு நகரங்களில் உள்ள இரயில் நிலையங்களும் இரயில் களும் ஏதோ ஒரு கட்டத்தில் சராசரி மக்களின் புகலிடமாக இருந்து  கொண்டு தான் இருக்கின்றன். அதுவும் இரயிலில் பயணம் செய்யும் பயண நேரத்தில் நமக்கு அது ஒரு வீடாகவே மாறுகிறது அதில் பயணம் செய்யும் சக பிரயாணிகள் நமது தற்காலிக நண்பர்கள் மற்றும் உறவினர்களாகவே மாறிவிடுவார்கள் அந்த சமயத்தில். எனகென்னவோ இரயில் நிலையங்கள் ஒரு சக மனிதனாகவே மனதில் பட்டு விட்டது. இரயில் நிலையங்கள் இரவில் அதனுடையே வாழ்ந்து வரும் பிச்சைகாரர்கள் சிறு வியாபாரிகள் வீடில்லாதவர்கள் ஆகியோருடன் சேர்ந்து தூங்குவது போலவே தோன்றும். மீண்டும் அதிகாலை புது மனிதர்கள் பர பரப்புடன் இரயில் நிலையத்திற்கு வரும் பொது விழித்து கொண்டு அவர்களுடன் ஒடதொடங்கும். பொதுவாக இரயில் நிலையங்கள் மனிதர்களின் அவலங்களுக்கு மவுன சாட்சியாகவே இருக்கின்றன. இரவில் அயர்ந்து தூங்கும் அநாதை குழந்தைகளுக்கு அவை ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட இடமாகவே இருக்கின்றன. இரவில் கட்டு தெறி எடுத்து ஓடும் இரயில்கள் ஏதோ அவசரத்தில் திக்கு தெரியாமல் ஓடும் மனித வாழ்கையை பிரதிபலிக்கும்  ஒரு மணி நேரம் கூட ஒரு இடத்தில உட்காரும் பொறுமை இல்லாத நபர் கூட இரயிலி ஒரு இரண்டு நாட்கள் அமைதியுடன் பயணம் செய்வதை பார்த்து இருக்கிறேன். அதுவும் வட மாநிலங்களுக்கு வேலையின் பொருட்டு செல்லும் பயணிகளின் கண்களில் ஊரைவிட்டு பிரியும் துக்கம் காணலாம். பெரும்பாலும் ராணுவ வீரர்கள் விடுப்பு முடிந்து சொந்தங்கள் வழியனுப்ப இரயிலில் ஏறும் தருணம் மிக கொடுமையானது. மனைவி குழந்தைகள் ஒருபக்கம் கனவா ஒருபக்கம் என தவிப்புகளுடன் கண்களால் ஏக்கத்தை பரிமாரிகொல்வதை நிறைய பார்த்து இருக்கிறேன். இரயில் கிளம்பிய பின் இரயில் கூடவே   புதிதாக திருமணம் ஆன இளம்பெண் கணவனை பார்த்து அழுதபடியே ஓடிவந்ததை கண்ணால் பார்த்து இருக்கிறேன்  என்னவோ இரயிலும் அந்த பெண்ணுடன் சேர்ந்து மவுனமாக அழுவதை போலவே அப்போது எனக்கு தோன்றியது. இரயில் மற்றும் இரயில் நிலையங்கள் சராசரி மனிதர்களின் ஆத்மா அவைகளுக்கு உயிரில்லை என்பதை மனம் ஒத்து கொள்ள மறுக்கிறது. அவைகளின் கட்டுபாட்டில் இருக்கும்போது நாம் அவைகளை மட்டுமே நினைத்து  கொண்டு இருப்போம். சார் விஜயவாடவா அடுத்த ஸ்டேஷன் அங்க கேண்டின் நல்ல இருக்கும் சார் உள்ள சாப்பாடு வாங்க வேணாம் ஸ்டேசன்ல  நா போய்  உங்களுக்கும் ஒரு சாப்பாடு வாங்கிட்டு வர்றேன் சார் என்று பக்கத்தில் இருந்த பயணி ஏதோ பல வருடம் பழகிய நண்பனை போல உரிமையுடன் கூறினார்.